விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு


விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
x

ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை வரும் 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரமம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த பிஜூமோகன், பணியாளர்களான நாரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், பெரியதச்சூர் விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத், தென்காசி முத்துமாரி, விழுப்புரம் அயினம்பாளையத்தை சேர்ந்த பூபாலன், தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ், கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஜூபின்பேபி, மரியா ஜூபின் ஆகிய இருவரும் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையிலும், பிஜூமோகன் உள்ளிட்ட 6 பேர் கடலூர் சிறையிலும் உள்ளனர். தாஸ் மட்டும் பிணையில் உள்ளார். இவர்களில் தாசை தவிர மற்ற 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை வரும் 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.



Next Story