வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி: புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பத்தின் அளவு குறைந்தது
கோடை வெயில் தொடர்ந்து சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. அதிகபட்சமாக திருப்பத்தூர், பாளையங்கோட்டை, சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மட்டும் 100 டிகிரியை கடந்து பதிவானது.
மற்ற இடங்களில் அதற்கு கீழ் தான் வெப்பத்தின் அளவு இருந்தது. வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் காற்று நிலப்பகுதியை நோக்கி வந்து இருப்பது காரணமாக சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 இடங்களில் கனமழை
அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
ஆறுதல்
நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரமாக இருந்த நிலையில், நேற்று வெப்பத்தின் அளவு குறைந்திருந்ததால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.