நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும்-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சனாதனத்தை பற்றி தற்போது பேசிக்கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பே சனாதனத்தை நிரூபித்தவர் பங்காரு அடிகளார். பெண்கள் கருவறை சென்று பூஜை செய்யும் முதல் புரட்சியை ஏற்படுத்தியவர். மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு சேவைகளை மக்களுக்கு செய்தவர். ஒரு சீருடையை அமைத்து கட்டுப்பாட்டுடன் அழைத்து சென்றவர். பெண்களின் சபரிமலை என்று மேல்மருவத்தூர் அழைக்கப்படும். அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்காக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என திட்டத்தை சொன்னார்கள். ஆனால் இன்று அதனை 100 சதவீதம் வெற்றிபெற கொண்டு செல்ல முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் என்றனர். தேர்தலுக்கு பின் தகுதிவாய்ந்த பெண்கள் என்கின்றனர். இதில் பல குழப்பங்கள் உள்ளன. பல பேருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து பெண்களுக்கும் கொடுக்க வேண்டும். இதனுடைய விளைவு தேர்தலில் எதிரொலிக்கும்.
டாஸ்மாக் கடைகள்
போதைக்கு பலரும் அடிமையாகிவிட்டனர். இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். எந்த கட்சியாக இருந்தாலும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். முதலில் கடையை குறையுங்கள், கடை திறப்பு நேரத்தை குறையுங்கள். அதன்பின் டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்.
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவது லட்சியம் என்கின்றனர். ஆனால் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அடுத்து தீபாவளி வர உள்ளது. இதில் ஒரு நாளைக்கு டாஸ்மாக்கில் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிப்பார்கள். இது போன்று இருந்தால் போதை இல்லாத தமிழகத்தை எப்படி பார்க்க முடியும்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி என்பது குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை. அனைவரும் பிரிந்து உள்ளனர். அனைவரும் ஒன்று சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியா கூட்டணியில் பல குழப்பங்களும் உள்ளது. யார் பிரதமர் என்ற பிரச்சினையும் உள்ளது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதியில் போட்டியிடும், யார் வேட்பாளர் என்பதை ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.