நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் யார்-யார்? - விரைவில் உத்தேச பட்டியல்
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து கேட்கப்பட்டது.
தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தை கேட்டறிந்தது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
இந்த ஆலோசனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த ஒருங்கிணைப்பு குழு தயார் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் என தெரிகிறது. அதன்பிறகு அந்த பட்டியல் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு இறுதி செய்யப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.