கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு - கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் பயணம்


கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு - கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் பயணம்
x

கோடை விடுமுறையையொட்டி கடந்த மே மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்தது. ஒரே மாதத்தில் உள்நாட்டு, பன்னாட்டு விமானங்களில் 19 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன் எவ்வாறு சென்னை விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டதோ அதுபோல் தற்போது மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். அதில் உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும், பன்னாட்டு விமானங்களில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேரும் பயணம் செய்து இருந்தனர்.

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் 11 ஆயிரத்து 405 விமானங்களில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்து 751 விமானங்களில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 49 பேரும், பன்னாட்டு முனையத்தில் 2 ஆயிரத்து 654 விமானங்களில் 4 லட்சத்தி 45 ஆயிரத்து 558 பேரும் பயணம் செய்து இருந்தனர்.

கடந்த மே மாதம் கோடை விடுமுறை காரணமாக விமான சேவை அதிகரித்தன. உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூரு, மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும் பன்னாட்டு பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களில் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த பயணிகளின் பெரும்பாலானவர் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணிகளின் நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்து உள்ளனர். மே மாதத்தில் 11 ஆயிரத்து 708 விமானங்களில் 18 லட்சத்து 90 ஆயிரத்து 638 பேர் பயணம் செய்து உள்ளனர். உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்து 907 விமானங்களில் 13 லட்சத்து 70 ஆயிரத்து 160 பேரும், பன்னாட்டு முனையத்தில் 2 ஆயிரத்து 801 விமானங்களில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 478 பேரும் பயணம் செய்து உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தை விட மே மாதம் விமான சேவைகளும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன.

சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள் நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன.

தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் இயங்கி வருவதில் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story