திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம் - போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை


திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம் - போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை
x

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்கள் அரசு விதிமுறைகளை மீறி இயங்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில், வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் இணைந்து தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்தனர்.

அவைகளில் 5 வாகனங்கள் உரிய ஆவணம் இல்லாமல் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அளவுக்கு அதிகமாக சவுடுமண் ஏற்றி வந்த 2 டிப்பர் லாரிகளை சிறைபிடித்தனர். இந்த வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் கனகம்மாச்சத்திரம் பகுதியில் அதிவேக சென்ற வாகனங்களை நவீன ரேடார் கருவிகளை கொண்டு தணிக்கை செய்து அதிவேகமாக சென்ற 19 வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

வாகன தணிக்கை குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறும்போது, 'தனியார் நிறுவனத்திற்காக ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியும், பழைய காலாவதியான வாகனத்தை இயக்குவதும், சாலைவரி கட்டாமல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்குவதும் குற்றமாகும்.

ஆகவே திருவள்ளூர் பகுதியில் நாங்கள் அதிகாலை மற்றும் இரவில் வாகனதணிக்கை செய்து வாகனங்களை சிறைபிடித்து அபராதம் விதித்தோம். கடந்த 2 நாட்களாக நடத்திய தணிக்கையில் 8 தனியார் நிறுவன வாகனங்கள், 2 டிப்பர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு ரூ.5 லட்சத்திற்கு மேல் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்,' என கூறினார்.


Next Story