விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆட்சேபனை இல்லை என்ற ஜமாத் கடிதத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

கோவை உக்கடம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பிள்ளையார் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கேட்டு பெரியகடை வீதி போலீசில் மகாலட்சுமி என்பவர் மனு கொடுத்தார். ஆனால் அப்பகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகம் பேர் வசிப்பதால் போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மகாலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, 'மனுதாரர் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஆட்சேபனை இல்லை என ஜமாத் அமைப்பினரிடம் இருந்து கடிதத்தை பெற்று போலீசில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு கடிதம் கொடுக்கும்பட்சத்தில், மனுதாரர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட போலீசார் அனுமதி அளித்து, பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரரும் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஆனால் மனுதாரருக்கு நிகழ்ச்சியை கொண்டாட மட்டுமே அனுமதி வழங்கப்படுமே தவிர, சிலையை ஊர்வலம் எடுத்துச் செல்லக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story