காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு


காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு
x

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதைக் கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனிடையே டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழக அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், வரும் அக்டோபர் 15-ந்தேதி வரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சித்தராமையா வெளியிட்ட அறிவிப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே போல் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய உள்ளதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.
Next Story