ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி - மேலும் 2 பேர் காயம்


ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி - மேலும் 2 பேர் காயம்
x

ஆவடி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை

ஆவடியை அடுத்த கோவில்பதாகை மசூதி தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் காமேஷ் (வயது 17). இவர், திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காமேஷ் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அபித்துராஜ் (17) மற்றும் பிரதீஸ் (17) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கோவில்பதாகையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை அபித்துராஜ் ஓட்டினார். காமேஷ், பிரதீஸ் இருவரும் பின்னால் அமர்ந்து பயணம் செய்தனர். வெள்ளானூர் மெயின் ரோட்டில் ஆவடி அடுத்த கன்னடபாளையம் அருகே சென்றபோது அவர்களுக்கு எதிரே டிராக்டர் ஒன்று வந்தது.

இதனால் காமேஷ் திடீரென மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினார். இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் மழைநீர் கால்வாய்க்காக கட்டிய கான்கிரீட் சுவரில் மோதியது. இதில் 3 பேரும் மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்தனர்.

இதில் மாணவர் காமேஷ் தலையில் பலத்த காயமடைந்ததால் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவரது நண்பர்களான அபித்துராஜ், பிரதீஸ் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அபித்துராஜ் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த பிரதீஸ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அபித்துராஜ் பக்கத்து வீட்டில் வசிப்பவர் புதிதாக மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். புதிய மோட்டார்சைக்கிளை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்ட இவர்கள், அவசரமாக மருந்து கடைக்கு செல்ல வேண்டும் என்று கூறி புதிய மோட்டார்சைக்கிளை வாங்கி சென்றதும், அப்போது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story