ஆமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த வாலிபர் கைது
ஆமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு ஆமதாபாத்தில் இருந்து விமானம் வந்தது. முன்னதாக அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தில் பயணம் செய்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தீப்குமார் (வயது 34) என்பவர் விமான கழிவறைக்கு சென்று திடீரென சிகரெட் பிடிக்க தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானத்தில் இருந்த சகபயணிகள், அவர் புகைப்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே விமான பணிப்பெண்கள் அங்கு வந்து, விமான பாதுகாப்பு சட்டப்படி விமானத்துக்குள் புகைப்பிடிக்கக்கூடாது என்று விதி உள்ளதை எடுத்து கூறினா்.
பின்னர் இது பற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். சென்னை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, புகைப்பிடித்த மத்திய பிரதேச பயணி சந்தீப் குமாரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி பாதுகாப்புடன் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சந்தீப் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.