சிறையில் இருந்து விடுதலையான மறு நாளே கைதான நபர்- மீண்டும் கம்பி எண்ணுகிறார்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நுழைவு வாயில் அருகே உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் வழக்கம் போல் பயணிகள் அமர்ந்து தங்களது ரெயிலுக்காக காத்திருந்தனர். இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 26) என்ற பயணியிடம் இருந்து நபர் ஒருவர் செல்போனை திருடியுள்ளார்.
பின்னர் அவர் திருடிய செல்போனுடன் ரெயில் நிலையத்தை விட்டு நலுவ முயன்றார். இதற்கிடையே அந்த நபர் செல்போன் திருடியதை கண்காணிப்பு கேமராவில் ஏற்கனவே கவனித்திருந்த இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர், அந்த நபரை ரெயில்வே வளாகத்தில் வைத்தே மடக்கி பிடித்தனர்.
அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான ரெயில்வே போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன்(42) என்பதும், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் சிறையில் இருந்து விடுதலையானதும் தெரியவந்தது. சிறையில் இருந்து விடுதலையான அடுத்த நாளே மீண்டும் சிறை கம்பியை எண்ணும் வகையில் போலீசார் மாரியப்பனை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.