கோவை கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் - பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி


கோவை கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் - பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
x

கோவையில் கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.

சென்னை

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் வெடித்த வழக்கில் ஜமேஷா முபின் (வயது 28), என்பவர் பலியானார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மொத்தம் 9 பேரை கைது செய்து பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் முகமது அசாரூதீன், அப்சர் கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பைரோஸ்கான் ஆகிய 5 பேரை ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், மீதமுள்ள முகமது தல்லா, முகமது ரியாஸ், நவாஸ், முகமது தவுபிக், சேக் இதயதுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ.அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், 6 பேருக்கும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் வருகிற 17-ந் தேதி மீண்டும் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்தும், கோவைக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Next Story