ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை


ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM GMT (Updated: 5 Aug 2023 8:39 AM GMT)

இன்று சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை விமான நிலையத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்.

முதுமலை காடு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னைக்கு வருகிறார். முன்னதாக புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் புறப்படும் அவர், கர்நாடகா மாநிலம் மைசூர் விமான நிலையத்திற்கு இன்று (5-ந் தேதி) பிற்பகல் 2.55 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தில் உள்ள முதுமலை தேசிய வனப்பகுதிக்கு பிற்பகல் 3.35 மணிக்கு செல்கிறார். பிற்பகல் 3.35 மணி முதல் 3.45 மணிவரை ஓய்வு எடுக்கிறார்.

பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணிவரை சுற்றிப் பார்க்கிறார். அங்கு யானைப் பாகன்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டுகிறார்.

பின்னர் இன்று மாலை 5 மணிக்கு முதுமலையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூருக்குச் செல்கிறார். மைசூர் விமான நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் புறப்படும் அவர் சென்னை விமான நிலையத்தை இன்று மாலை 6.50 மணிக்கு வந்தடைகிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சென்னைக்கு அவர் வருவது முதன்முறையாகும்.

பட்டமளிப்பு விழா

சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். மேலும், கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதியை வரவேற்கின்றனர். அங்கிருந்து ஜனாதிபதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை ராஜ்பவனை அடைகிறார். அங்கு இரவு உணவு அருந்திவிட்டு அங்கேயே தங்குகிறார்.

மறுநாள் (நாளை 6-ந் தேதி) கவர்னர் மாளிகை ராஜ்பவனில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழா பகல் 12 மணிவரை நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு அருந்துகிறார்.

கவர்னரின் விருந்து

ராஜ்பவனில் முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3.15 மணி முதல் 3.45 மணி வரை ஜனாதிபதியுடன் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு நடைபெறுகிறது.

நாளை மாலை 7 மணியளவில் கிண்டி ராஜ்பவனில் நடக்கும் பாரதியார் படத் திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார். பின்னர் அங்குள்ள தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை ஜனாதிபதி திரவுபதி முர்மு சூட்டுகிறார். அதைத்தொடர்ந்து நடைபெறும் கலாசார நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

பின்னர் இரவு 8 மணிக்கு ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்கான அழைப்பை கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதல்-அமைச்சரிடம் கொடுத்து உள்ளார். அவர்கள் தவிர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரி பயணம்

நாளை இரவிலும் கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை, 7-ந் தேதி) காலை 9.30 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

7-ந் தேதி புதுச்சேரியில் ஜவகர்லால் முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார்.

தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார். இதன்பின்பு புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டு அங்கு நடைபெற இருக்கும் மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார்.


Next Story