திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jan 2024 9:34 AM GMT (Updated: 26 Jan 2024 9:56 AM GMT)

கொரோனா காலத்தில் கூட விலைவாசியை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கல்வி புரட்சியில் அ.தி.மு.க. 30 ஆண்டு கால ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து பொருட்களின் விலையும் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் கூட விலைவாசியை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.

கருணாநிதி அவருக்கு பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார். மன்னராட்சி முறையை கொண்டுவர தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. அதிகார மையம் தி.மு.க.வில் அதிகரித்து விட்டது.

சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story