மாணவர்கள் உரிமையை காக்க 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


மாணவர்கள் உரிமையை காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

‘நீட்’ தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று முதல்-அமைச்சரிடம் வழங்கி, அதை புதுடெல்லியில் ஜனாதிபதியிடமும் வழங்க இருக்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா, ஈரோடு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவை பெருந்துறை அருகே சரளை பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் வாரிசுகள்தான் பயன் அடையும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். ஆம். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் வாரிசுகள்தான் பயன் அடைவார்கள். இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் கலைஞரின் கொள்கை வாரிசுகள். தி.மு.க.வின் வாரிசுகள். இந்தவாரிசுகள் பயன் அடைவார்கள்.

'நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோதே போராட்டங்கள் நடத்தி வந்தது. தேர்தல் அறிக்கையிலும் கூறினோம். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, 'நீட்' தேர்வு வேண்டாம் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை பெற்று, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

'நீட்' தேர்வு தி.மு.க.வின் பிரச்சினை இல்லை. உதயநிதி ஸ்டாலினின் பிரச்சினை இல்லை. மாணவ-மாணவிகளின் உரிமை. கிராமப்புற மாணவ-மாணவிகள் தடையின்றி மருத்துவம் படிக்க வேண்டும் என்று நுழைவுத்தேர்வையே ரத்து செய்தவர் கருணாநிதி.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு அவர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அவருக்கு பிறகு கல்வி, நிதி என்று அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுத்து விட்டனர். எனவேதான் சேலம் மாநாட்டுக்கு மாநில உரிமை மீட்பு போராட்டம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

இந்த மாநாட்டில் 'நீட்' தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று முதல்-அமைச்சரிடம் வழங்கி, அதை புதுடெல்லியில் ஜனாதிபதியிடமும் வழங்க இருக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க.வும் பேசுகிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமும் நீங்கள் நீட் எதிர்ப்பு கையொப்பம் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதன் மூலம் வரும் பெருமையை உரிமையை உங்களுக்கே தருகிறோம் என்றே கூறிவிட்டேன்.ஆனால் அவர் நீட் விஷயத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது என்கிறார். யார் நாடகம் ஆடுவது என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு போராட்டம் என்பது மாணவ-மாணவிகளின் உரிமை போராட்டம். இந்த போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Next Story