என்.எல்.சி. விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்..!


என்.எல்.சி. விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு:  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்..!
x
தினத்தந்தி 31 July 2023 5:32 AM GMT (Updated: 31 July 2023 5:41 AM GMT)

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன விவகாரத்தில் விவசாயிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நிலத்தை வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வளையமாதேவி கிராமத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து புவனகிரி எம்.எல்.ஏ. அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருவதால் நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி மற்றும் புவனகிரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


முன்கதை

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. நிறுவனம் கைவிடக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணியை என்.எல்.சி.நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


Next Story