'தேர்வு எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு நடத்த வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தேர்வு எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

மாணவர்கள் தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story