அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

நிறுத்தத்தை தாண்டி நிற்பதால் அவதிக்குள்ளாவதாக கூறி அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

பஸ் நிறுத்தத்தில் நிற்காமல்...

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வஞ்சூவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மாத்தூர், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

இதேபோல் தனியார் மற்றும் அரசு துறைகளில் ஸ்ரீபெரும்புதூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலர் வேலை செய்து வருகின்றனர்.

தாம்பரத்தில் இருந்து படப்பை வழியாக ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் தடம் எண்: 583 அரசு மாநகர பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் வஞ்சூவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று வருவதாகவும் சில நேரங்களில் பஸ் நிறுத்தத்தை தாண்டி 100 மீட்டர் தொலைவில் போய் நிற்பதாகவும் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள், நேற்று தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் 583 எண் கொண்ட அரசு பஸ்சை சிறை பிடித்து வஞ்சூவாஞ்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சந்தானம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உறுதி அளித்தனர்

தகவல் அறிந்து வந்த போக்குவரத்து அதிகாரிகள் மாணவர்கள், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். அப்போது மாணவர்கள், பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் முன்னிலையில் அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story