தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM GMT (Updated: 9 Oct 2023 12:16 AM GMT)

தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை

தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கும் வகையில், செனாய் நகரில் சென்னை மாநகராட்சியுடன் விலங்குகளின் சொர்க்கம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். பொதுமக்களுக்கு வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு நிருபர்களிடம் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தத்தெடுக்க வேண்டும்

தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும். நாய்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவே இந்த தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளோம். கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 56 ஆயிரத்து 179 தெரு நாய்கள் இருந்தது. தற்போது மீண்டும் தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1½ லட்சம் நாய்கள் இருக்கும் என அனுமானிக்கப்படுகிறது. எனவே, தெரு நாய்களை பொதுமக்களே தாமாக முன்வந்து தத்தெடுக்கும் போது மட்டுமே நாய்களால் ஏற்படும் பிரச்சினையை சரிசெய்ய முடியும்.

டெங்கு பாதிப்பு

கால்நடைகளின் சுகாதாரம் முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது போல விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. 2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது சென்னையிலும் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் சுயமாக மருந்தை உட்கொள்ளாமல் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சென்னையில் தாழ்வான பகுதிகளின் எண்ணிக்கை 37 ஆக குறைந்துள்ளது.

இதேபோல, ரூ.993 கோடியில் ஆயிரத்து 493 கிலோ மீட்டரில் சாலைகள் போடப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சில இடத்தில் சாலை போடுவதில் குறைபாடு காணப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. கடந்த 6 மாதத்தை விட தற்போது சொத்துவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ரூ.700 கோடிக்கு மேல் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.கே.மோகன் எம்.எல்.ஏ., வருவாய்த் துறை கமிஷனர் நந்தகுமார், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story