காதலித்ததால் ஆத்திரம்: அக்காளையும், காதலனையும் வெட்டிக்கொன்ற தம்பி - மதுரையில் பரபரப்பு


காதலித்ததால் ஆத்திரம்: அக்காளையும், காதலனையும் வெட்டிக்கொன்ற தம்பி - மதுரையில் பரபரப்பு
x

காதலித்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது கொம்பாடி கிராமம். இந்த கிராமத்தின் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நந்திபெருமாள். இவருக்கு சிவா, சதீஷ்குமார் (வயது 28), முத்துக்குமார் என 3 மகன்கள் இருந்தனர். இதில், மூத்த மகன் சிவா, ஏற்கனவே இறந்துவிட்டார். சதீஷ்குமார், கட்டிட வேலை பார்த்து வந்தார்.

சதீஷ்குமாருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரது மகள் மகாலட்சுமிக்கும் (25) பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும், காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு மகாலட்சுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தால், இரு குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு, வலையங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. ஆனால் தன் கணவருடன் ஒரு வாரம் மட்டுமே குடும்பம் நடத்திய மகாலட்சுமி, பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் மகாலட்சுமியிடம் இருந்து அவரது கணவர் விவாகரத்து பெற்றுவிட்டார்.

இதற்கிடையே மகாலட்சுமியும், சதீஷ்குமாரும் மீண்டும் செல்போனில் பேசி, உறவை தொடர்ந்தனர். இதனை அறிந்த மகாலட்சுமியின் சகோதரர் பிரவீன்குமார் (20), இருவரையும் கண்டித்தார். சதீஷ்குமாரின் உறவினர்களிடமும் இந்த தகவல் குறித்து தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர்கள் இருவரின் பழக்கம் தொடர்ந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், உங்கள் இருவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டினார். இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என எண்ணி, சதீஷ்குமார் எங்கு சென்றாலும், அவருடைய சகோதரர் முத்துக்குமாரும் உடன் சென்று வந்தார். குறிப்பாக, சதீஷ்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, பஸ்நிறுத்தத்தில் இருந்து அவரை அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் சதீஷ்குமார் பஸ்சில் வந்தார். பஸ்நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு தனியாக நடந்து சென்றார். அவர் தனியாக வருவதை அறிந்த பிரவீன்குமார், கொம்பாடி ஒத்தவீடு அருகே மறைந்திருந்து, சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனால் கண் எரிச்சலுடன், அங்கிருந்து தப்பி ஓடினார்.

அவரை துரத்தி சென்ற பிரவீன்குமார், அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அப்போது அங்கு வந்த முத்துக்குமார், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். பிரவீன்குமாரை தடுக்க முயன்றார். இங்கிருந்து ஓடிவிடு, இல்லையென்றால் உன்னையும் கொலைசெய்து விடுவேன் என பிரவீன்குமார் மிரட்டினார்.

பின்னர் ஆத்திரம் அடங்காமல், என் அக்காவுடன் பேசாதே, பழகாதே என்றேன். நீ, கேட்கவில்லையே என பிரவீன்குமார் அலறியபடி, சதீஷ்குமாரின் தலையை வெட்டி துண்டாக்கினார். சதீஷ்குமாரின் தலையை மட்டும் எடுத்துவந்து அங்குள்ள நாடக மேடை மீது வைத்துவிட்டு, நேராக அவருடைய வீட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த தனது அக்காள் மகாலட்சுமியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் மகாலட்சுமி படுகாயம் அடைந்தார். அவரை தடுக்க முயன்ற தாயார் சின்ன பிடாரியின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரது கை துண்டானது. சிறிது நேரத்தில் மகாலட்சுமி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அங்கிருந்து பிரவீன்குமார் தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சதீஷ்குமார், மகாலட்சுமியின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

பலமுறை எச்சரித்தும் கேட்காமல் காதலித்து வந்த அக்காளையும், அவரது காதலனையும் தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story