தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம்: மகனின் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை - தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலம்
தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தை மற்றும் மற்றொரு மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திடீர்நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன்(வயது 50). இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு மதன்குமார்(24) மற்றும் மாதவன்(20) என 2 மகன்கள்.
இவர்களில் பெயிண்டரான மதன்குமார், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாய், தந்தை மற்றும் தம்பியுடன் அடிக்கடி வீண் தகராறு செய்து வந்ததுடன், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் வந்துள்ளார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மதன்குமார், வழக்கம்போல் தனது தாய் தேவியிடம் வீண் தகராறு செய்தார். இதனை அவரது தந்தை மற்றும் தம்பி இருவரும் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கு கைகலப்பு ஏற்பட்டது.
இதில் மதிவாணன், மாதவன் இருவரும் சேர்ந்து வீட்டில் கிடந்த நைலான் கயிற்றால் மதன்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை தூங்குவது போல படுக்க வைத்து விட்டு இருவரும் தூங்க சென்று விட்டனர்.
காலையில் எழுந்து கழுத்தை நெரித்து கொல்ல பயன்படுத்திய நைலான் கயிற்றை கடலில் வீசி விட்டு எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மதன்குமார் குடும்பத்தினர் வாய்மொழியாக புகார் செய்தனர். அதில், மதியம் 2 மணி ஆகியும் மதன்குமார் எழுந்திருக்காததால் அவரை தாய் தேவி எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை என்றும், அவரது கழுத்தை மோட்டார் சைக்கிள் கீ செயினில் உள்ள நைலான் துணியால் தனக்குத்தானே இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் அங்கு சென்று மதன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் மதன்குமாரின் தந்தை மதிவாணன், தம்பி மாதவன் இருவரையும் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் விசாரித்த போது அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதால் ஆத்திரத்தில் மதன்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரே தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணன், மாதவன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.