மழைநீர் வடிகால் விவகாரம்: அமைச்சரே மாற்றி பேசினால் மக்கள் யாரை நம்புவார்கள்? அண்ணாமலை கேள்வி


மழைநீர் வடிகால் விவகாரம்: அமைச்சரே மாற்றி பேசினால் மக்கள் யாரை நம்புவார்கள்? அண்ணாமலை கேள்வி
x
தினத்தந்தி 9 Dec 2023 9:00 PM GMT (Updated: 9 Dec 2023 9:00 PM GMT)

அமைச்சர் கே.என்.நேரு முன்பு அளித்த பேட்டியில் 98 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது 42 சதவீதம் பணிகள் மட்டுமே நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார் அண்ணாமலை.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பா.ஜனதா சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு, சென்னை காரப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

சென்னையை அடுத்த துரைப்பாக்கம், காரப்பாக்கம் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சென்னையின் மையப்பகுதியைவிட்டு வெளியே வந்து பார்க்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளியே வந்து பார்க்க வேண்டும். சென்னையில் 99 சதவீதம் இயல்பு நிலை திரும்பியதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகிறார். எங்கே இயல்பு நிலை திரும்பி உள்ளது. அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் அதிகமாக மிகைப்படுத்தி சொல்லாமல் உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, வடிகால் அமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக முன்பு கூறினார். ஆனால், தற்போது அவர் தெரிவித்த புள்ளி விவரங்களை பார்க்கும்போது வெறும் 42 சதவீதம் பணிகள்தான் நிறைவடைந்துள்ளது. ஒரு அமைச்சரே மாற்றி, மாற்றி பேசினால் மக்கள் யாரை நம்புவார்கள். மழை வெள்ளத்திற்கு அரசின் மோசமான செயல்பாடுகளே காரணம்.

மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கீடு செய்த ரூ.4 ஆயிரத்து 397 கோடி எங்கே போனது? என்பது தெரியவில்லை. 2 ஆட்சியை சேர்த்து ரூ.8 ஆயிரம் கோடி எங்கே சென்றது?. அதுபோக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. எவ்வளவு நாட்கள்தான் மத்திய அரசை குறை சொல்லி வண்டி ஓட்ட முடியும். இப்போது மக்கள் சரியாக கணக்கு கேட்க தொடங்கி உள்ளனர். மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கணக்கு சொல்லுங்கள் என அரசை கேள்வி கேட்கின்றனர். ஆனால், அவர்களால் கணக்கு கொடுக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story