"தமிழகத்தில் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்களில் திருப்பணி" - அமைச்சர் சேகர்பாபு தகவல்


தமிழகத்தில் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்களில் திருப்பணி - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

இந்த ஆண்டு 80 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை அமைச்சர்கள் சேகர்பாபு, தாமோ அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத 8 பழமை வாய்ந்த கோவில்களை ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பழமை வாய்ந்த கோவில்களுக்கு நூறு கோடி ரூபாயை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதில் 80 கோவில்களில் இந்த ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில், 1,500 கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story