கமலாலயத்தில் இருக்க வேண்டியவர், ராஜ்பவனில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார்" - கவர்னருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


கமலாலயத்தில் இருக்க வேண்டியவர், ராஜ்பவனில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார் - கவர்னருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
x
தினத்தந்தி 4 May 2023 1:59 PM GMT (Updated: 4 May 2023 2:06 PM GMT)

கவர்னர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நீண்ட கண்டனத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலாக அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதில் முக்கியமானவை பின்வருமாறு:

கவர்னர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல. எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களை பேசி வருகிறார்.

கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ராஜ்பவனில் இருந்து அரசியல் செய்கிறார். கவர்னர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை; பாஜக தலைவர் பதவிக்காக வந்தது போல் தெரிகிறது. தமிழகத்தின் ஜனநாயக சக்திகளின் கடுமையான கண்டனத்திற்குரியவர் கவர்னராக இருக்கிறார்.

கவர்னர் பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார், ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார் கவர்னர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் ஆர்.என்.ரவி செய்கிறார்.

திராவிடத்திற்கு தவறான பொருளை கூறுகிறார். திருக்குறளை திரிக்கிறார். மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு கவர்னர்பேச வேண்டாம்.

தமிழில் தேசிய கீதம் வாசிக்கும்போது அவமதிக்கும் வகையில் அட்டப்பேரவையை விட்டு வெளியேறியது ஏன். "மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பமில்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. கவர்னர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது"

கவர்னர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். இவ்வறு கூறப்பட்டுள்ளது.


Next Story