தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செங்குன்றம் அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி(வயது 48). இவர், தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகை மற்றும் தீபாவளி சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.
ஆனால் சொன்னபடி அவர்களுக்கு தீபாவளி பொருட்கள் மற்றும் நகைகளை கொடுக்காமல் சத்யமூர்த்தி பணத்தை மோசடி செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்த மோசடி குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரையிலும் சத்யமூர்த்தியை போலீசார் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மோசடியில் ஈடுபட்ட சத்யமூர்த்தியை உடனடியாக கைது செய்யக்கோரி செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் எடப்பாளையம் பகுதியில் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சாலை மறியல் செய்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சத்யமூர்த்தியை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த சாலை மறியலால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.