தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 40). இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சீட்டில் பணத்தை சேர்க்க ஏஜெண்டுகளையும் இவர் நியமித்து பணத்தை வசூல் செய்ததாக தெரிகிறது.
இதில், 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என 2 வகையான சீட்டை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில், குறித்த நேரத்தில் தங்க நகையை தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டஜோதியை கைது செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்கள் நேற்று காலை பெரியபாளையம்-திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.