ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - போலீசார் தேடுதல் வேட்டை


ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - போலீசார் தேடுதல் வேட்டை
x

ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்டார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் மாங்காடு அடுத்த கோவூர், ராயல் நகர், 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது வீட்டுக்கு நேற்று மாலை வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றனர். தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், சுரேஷ்குமார் திருமணமாகாமல் தனது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், தனக்கு சொந்தமான ஒரு வீட்டை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்காக நேற்று முன்பணம் கொடுக்க சிலர் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது 11 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி சுரேஷ்குமாரின் கை, கால்களை கட்டி காரில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் செல்லும்போது சுரேஷ்குமார் தங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் அதன் காரணமாக கடத்தி செல்வதாக அங்கிருந்த ஒருவரிடம் கூறிவிட்டு சென்றனர். இது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மாங்காடு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து சிலரை போலீசார் கைது செய்து நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்த சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story