தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி - கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது


தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி - கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது
x

திருவள்ளூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாளந்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 33). இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மளிகை கடை நடத்தி வந்தார். பின்னர் ஜோதி மற்றும் சத்தியமூர்த்தி என்பவரும் சேர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் மாதம் ரூ.1,000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் ரூ.500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். இதில் தாமரைப்பாக்கம், மாளந்தூர், வெங்கல், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், சென்னை என பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்தனர். இதற்கிடையே இந்த நிறுவனத்தில் இருந்து சத்தியமூர்த்தி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

ஜோதியின் மனைவி சரண்யா (25) மற்றும் தந்தை மதுரை (65), சகோதரர் பிரபு என்கிற பிரபாகரன் (30) ஆகியோ சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் தீபாவளி சீட்டு பணத்தை வசூலித்து வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிளை நிறுவனங்களை தொடங்கி முகவர்களை நியமித்து சுமார் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் வசூலித்ததாக தெரிகிறது.

தீபாவளி நெருங்கியதும் பணம் செலுத்தியவர்கள் உரிய பொருட்களை கேட்டுள்ளனர். இந்த நிலையில் ஜோதி சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்தாருடன் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் மற்றும் முகவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பின்னர் புகார் மனு கொடுத்தனர்.

வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் வழக்குபதிவு செய்து 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஜோதி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோதி மற்றும் ஜோதியின் தந்தை மதுரை, மனைவி சரண்யா மற்றும் தம்பி பிரபாகர் ஆகிய 4 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த துப்பாக்கி லைசென்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கி எனவும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சத்தியமூர்த்தி மீதும் வழக்கு பதியபட்டதாக தெரிகிறது. இவர் தற்போது தனியாக நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் இந்த வழக்கில் சத்தியமூர்த்தி பெயரை பொய்யாக சேர்த்ததாக கூறப்படுகிறது.

எனவே எந்த புகாரும் வராமல் ஏஜென்சி நடத்தி வரும் சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என வலியுறுத்தி அவரது நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் இது சம்பந்தமான மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story