ரூ.3 கோடி பண மோசடி வழக்கு: அரசு அதிகாரி போல் நடித்து நேர்முக தேர்வு நடத்தியவர் கைது


ரூ.3 கோடி பண மோசடி வழக்கு: அரசு அதிகாரி போல் நடித்து நேர்முக தேர்வு நடத்தியவர் கைது
x

ரூ.3 கோடி பண மோசடி வழக்கில் அரசு அதிகாரி போல் நடித்து நேர்முக தேர்வு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

மத்திய, மாநில அரசு பணிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட மோகன் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர், அரசு துறை அலுவலகங்களில் நேர்முக தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இந்த மோசடியை அரங்கேற்றி இருந்தார். இந்த மோசடி செயலில் அவருக்கு சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் 5-வது தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (57) என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் அவர், அரசு பணி நியமன அதிகாரி போன்று நடித்து சென்னை தலைமை செயலகத்தில் வைத்து போலியாக நேர்முக தேர்வு நடத்தியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து போலி பணி நியமன ஆணைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story