நெல்லையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


நெல்லையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

Image Courtesy : @CMOTamilnadu twitter

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் மற்றும் சாயச்சாலை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் நெல்லையில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம், கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் மற்றும் சாயச்சாலை கட்டிடங்கள் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அதன்படி நெசவாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவும் வகையில், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழும திட்டத்தின் கீழ், நெல்லையில் 9,320 சதுர அடி பரப்பளவில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1,900 சதுர அடி பரப்பளவில் ரூ.1.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலினை தரமான முறையில் சாயமிட்டு வழங்க ஏதுவாக, விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டம் நிதியுதவியுடன் மதுரை மாவட்டம், தொட்டியபட்டியில் ரூ.72.6 லட்சம் செலவிலும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரூ.84.37 லட்சம் செலவிலும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ரூ.72.11 லட்சம் செலவிலும், என மொத்தம் ரூ.2.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாவட்ட அளவிலான சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story