போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி; கணவன், மனைவி கைது - ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை


போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி; கணவன், மனைவி கைது - ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
x

போலி ஆவணம் தயாரித்து, ரூ.80 லட்சம் நிலம் மோசடி செய்த கணவன், மனைவியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி நிர்மலா தேவி (வயது 53). இவர் கடந்த 2008-ம் ஆண்டு மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியில் உள்ள ரூ.80 லட்சம் மதிப்புள்ள 55 சென்ட் நிலத்தை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். இந்நிலையில் பத்மாவதிக்கு அந்த இடத்தை போரூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் முன்பு விற்றுள்ளார். இந்த நிலையில் அதே இடத்தை மகாலிங்கத்தின் மகன் சேகர் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து போரூரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு பவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, நிர்மலாதேவி தனது இடத்தின் வில்லங்க சான்றை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சரிபார்த்த போது, போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிர்மலாதேவி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை சேகர்(63) மற்றும் அவரது மனைவி நிர்மலா (57) ஆகிய இருவரும் விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சேகர் அவரது மனைவி நிர்மலா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல் திருநின்றவூர் அடுத்த பிரகாஷ் நகரை சேர்ந்தவர் சங்கமித்ரா (64). இவருக்கு சொந்தமாக திருநின்றவூர் அடுத்த நாச்சியார் சத்திரம் பகுதியில் 6,068 சதுர அடியில் இடம் உள்ளது. இந்த இடத்தை பட்டாபிராம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சந்தியா (30) என்பவருக்கு மாத வாடகைக்கு 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் 3 மாதங்களுக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு செய்தநிலையில், சந்தியா மற்றும் அவரது கணவர் தணிகைவேல் (39) ஆகிய இருவரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள அந்த இடத்தை வேறொரு நபருக்கு அடமானம் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சங்கமித்ரா ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தியா மற்றும் அவரது கணவர் தணிகைவேல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story