திருத்தணி அருகே ஏரியில் மணல் திருட்டு - லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் எட்டிக்குப்பம் ஏரியில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மேல் எட்டிக்குப்பம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் மணலை லாரியில் கடத்திக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த லோகு (வயது 50), திருத்தணி அக்கையா நாயுடு தெருவைச் சேர்ந்த பழனி (60) மற்றும் கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேலு (39) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.