இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்


இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம்

மாணவர்களின் கல்விக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ஆசிரியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி பத்தாயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிகளை புறக்கணித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை முதல் அரசுப்பள்ளிகளில் 2024-25 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும், பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் தொடங்க உள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் 311-வது வாக்குறுதியான சமவேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவது எப்போது எனவும், கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தின் போது ஊதிய முரண்பாடை களைய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் நிலை என்ன ? என இடைநிலை ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பள்ளி புறக்கணிப்பு, பள்ளிக்கல்வித்துறை வளாகம் முற்றுகை, காலவரையற்ற உண்ணாவிரதம் என 11-வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதுவரை அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, மாணவர்களின் கல்விக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story