செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு


செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு
x

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது வரை அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள செந்தில்பாலாஜி சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த மனு சென்னை ஐகோர்ட்டில் வரும் திங்கட்கிழமை (19ம் தேதி) விசாரணைக்கு வரவிருந்தது.

இந்நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு பதில் புதன்கிழமைக்கு (21ம் தேதி) ஒத்திவைக்க வேண்டுமென செந்தில்பாலாஜி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை இன்று ஏற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அதேவேளை, தன்மீது பதியப்பட்டுள்ள அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கை இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பார்வைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. வழக்கு வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.


Next Story