தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்களில் இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு


தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்களில் இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு
x

இதனால் நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் அடுத்த (அக்டோபர்) மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், மாணவர்கள்,உள்ளிட்டோர், இடையில் இருக்கும் திங்கள்கிழமை (அக்.3) ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, இன்று முதலே பயணிக்கத் தொடங்கி விடுவார்கள்.

இதனால் நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் (செப்.30, அக்.1) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதே போல் பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகையைக் கொண்டாட அரசு பஸ்களில் ஊர்களுக்குச் செல்ல செப்.30, அக்.1,2 ஆகிய நாள்களில் 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதே நேரம் வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவது போல் சென்னை, கோயம்பேட்டில் இருந்து செல்லும் சில ஊர்களுக்கான பஸ்கள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் ஆகியன தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பைபாசில் (மாநகர போக்குவரத்துக் கழக பூந்தமல்லி பைபாஸ் அருகில்) இருந்து இயக்கப்படும்.

இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த இடங்களுக்குச் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் மாநகர பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதர ஊர்களுக்கு வழக்கம்போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் தேவைக்கேற்ப தொடர்ச்சியாக பஸ்களை இயக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள், tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story