சுத்தமாக இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்துவது போல சிலர் விளம்பரம் செய்கிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு


சுத்தமாக இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்துவது போல சிலர் விளம்பரம் செய்கிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 20 Jan 2024 8:00 PM GMT (Updated: 20 Jan 2024 8:00 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினையை நான் ஏற்கனவே அமைச்சர் என்ற முறையில் 2 முறை அவர்களை அழைத்து தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் தை கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அவர் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,225 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம். இந்த எண்ணிக்கை இந்த மாதத்திற்குள் 1,316 ஆக உயரும். அதேபோல் நில மீட்பை பொறுத்த அளவில் ரூ.5,508 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கிறோம்.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகபெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ரூ.599.50 கோடி மதிப்பீட்டில் 238 பணிகளும், அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.131.97 கோடி மதிப்பீட்டில் 173 பணிகளும் என மொத்தம் முருகன் கோவில்களில் மட்டும் ரூ.731.47 கோடி மதிப்பீட்டில் 411 பணிகள் நடைபெற்று வருகின்றன.

தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே கோவில்கள் அனைத்தும் தூய்மையாக தான் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இன்றைக்கு சிலர் சிலர் சுத்தமாக இருக்கிற கோவில்களையே சுத்தப்படுத்துவது போல விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு கவர்னரும் துணை நின்று, சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டு இருக்கிறார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினையை நான் ஏற்கனவே அமைச்சர் என்ற முறையில் 2 முறை அவர்களை அழைத்து தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். மனது ஒத்துப்போனால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story