சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்


சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்
x

சென்னையில் 200 வார்டுகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தனர்.

சென்னை

சென்னையில் பருவ மழையினால் ஏற்படும் மழைக்கால வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சமீபத்தில் ரிப்பன் மாளிகையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக கோடம்பாக்கம் வண்டிக்காரன் தெரு ராணி அண்ணா நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனை கருத்தில்கொண்டு இந்தாண்டு மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கி 6 மாத காலத்தில் விரைந்து முடிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு பருவமழையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேக்கம் இல்லை.

தற்சமயம் பெய்துள்ள மழையின் காரணமாக பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகள் மழைநீர் வடிகால்களில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.

எனவே, மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்வழிக்கால்வாய்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் பணி மாநகராட்சியின் சார்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று சாலைகளில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீர்செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பருவமழைக்கு பின்னர் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளும் முழுமையாக சீர்செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் மழைக்கால வியாதிகளான காய்ச்சல், சளி, தொண்டை வலி, சேற்றுப்புண் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து இன்று 200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம்முகாம்களில் சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து டாக்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story