முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

வேலாயுதம்பாளையத்தில் உள்ள பவித்திரம் பாலமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகனுக்கு புனித நீரால் நீராட்டப்பட்டு, பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்பட 18 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பொதுவாக முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழி எழுந்தது. மேலும் சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும், நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு என்பதால் ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து மலையை சுற்றி வலம் வந்து, முருகனை வழிபட்டனர். இதேபோல் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன், காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர், வெண்ணெய்மலை முருகன் ஆகிய கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


Next Story