சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானம் 'திடீர்' ரத்து
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் செல்ல இருந்தனர்.
இந்த விமானம், வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இன்று அதிகாலை 2 மணிக்கு வரவேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னைக்கு வரவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து, இலங்கைக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் பயணிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தகவல் கிடைக்காத சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர். பயணிகள் பலர் தங்கள் விமான டிக்கெட்களை வேறு விமானங்களுக்கு மாற்றியும், சிலர் டிக்கெட்டுகளை ரத்து செய்தும் சென்றனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.