போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
x

சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்

புதிய போலீஸ் சூப்பிரண்டு

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பிரபாகர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கரூர் மாவட்டத்தின் 32-வது போலீஸ் சூப்பிரண்டாக பிரபாகர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், சட்டம் பயின்று வரலாற்றுத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் துணை சூப்பிரண்டாக தேர்ச்சி பெற்று கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உட்கோட்டங்கள், சென்னை ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்தும் உள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதிரடிப்படையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார்.

உடனடியாக நடவடிக்கை

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, சென்னை பெருநகரின் நவீன கட்டுப்பாட்டு அறை, செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் மாவட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். மேலும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஓராண்டாக பணியாற்றி உள்ளார். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரபாகர் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் சூதாட்டம் தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் தொடர்பாக எந்த நேரமும் பொதுமக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.


Next Story