ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்: உறவினர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு


ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்: உறவினர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு
x

ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் உறவினர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வழக்கம் போல் பள்ளி முடிந்து தன்னுடைய் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சில் சென்றார். அப்போது அந்த பஸ்சில் இருந்த திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்த தொழிலாளி ஸ்டீபன் (வயது 51) மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மாணவியின் தாயார் இது சம்பந்தமாக திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனை கைது செய்தனர். இதற்கிடையே பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஸ்டீபனை அந்த மாணவியின் தந்தை உள்பட 3 பேர் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று ஸ்டீபன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story