புறநகர் ரெயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே


புறநகர் ரெயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Dec 2023 4:46 PM GMT (Updated: 6 Dec 2023 6:27 PM GMT)

திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆவடி, பேசின்பிரிட்ஜ், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடற்கரை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதில், பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. கூட்ட நெரிசலால் பயணிகள் சிரமம் அடைந்தனர். மேலும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் வெள்ள பாதிப்பு குறைந்ததால் சென்னை சென்டிரல் - ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழித்தடத்தில் இன்று மதியம் 3 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரெயில் என இயக்கப்பட்டன.

இந்த நிலையில், நாளை (7-ந்தேதி) முதல் சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளது. சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.


Next Story