கொடுங்கையூரில் வங்கியில் 'திடீர்' தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம்


கொடுங்கையூரில் வங்கியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம்
x

கொடுங்கையூரில் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே தப்பி ஓடினர்.

சென்னை

சென்னை கொடுங்கையூர் எத்திராஜ்சாமி சாலை எம்.ஆர்.நகர் பகுதியில் 'பேங்க் ஆப் இந்தியா' வங்கி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலையில் வழக்கம் போல் வங்கி செயல்பட தொடங்கியது. வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் வங்கி பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், வங்கியில் உள்ள கணினி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இன்வெர்ட்டர் பேட்டரி மூலம் இயங்க தொடங்கின.

இதற்கிடையே சிறிது நேரத்தில் இன்வெர்ட்டர் அறையில் இருந்து 'டமால்' என்று பயங்கர சத்தம் எழுந்து அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதன் காரணமாக ஏற்பட்ட தீவிபத்தை பார்த்த அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியிலே தப்பி ஓடி வந்தனர்.

இதை அறிந்த வங்கி மேலாளர் லட்சுமி நாராயணன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பான தகவலின் பேரில், செம்பியம், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரசாயன கலவை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் இன்வெர்ட்டர் அறையில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பேட்டரிகள், இன்வெட்டர்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story