நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் சம்மன்: சீமான் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி விளக்கம்


நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் சம்மன்: சீமான் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி விளக்கம்
x

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்கு சீமான் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சென்னை

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை செய்தார். பின்னர் திருவள்ளூரில் உள்ள மகிளா கோர்ட்டு மாஜிஸ்திரேட் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது பலமுறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி தெரிவித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு சம்மன் அளித்தனர். அதில் கடந்த 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்று சீமான் ஆஜராகவில்லை.

இதுகுறித்து நாம் தழிழர் கட்சியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராவார் என தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். ஆனால் சீமான் நேற்று போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவரது வழக்கீல்கள் 6 பேர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பின்னர் சீமான் தரப்பு வக்கீல் சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விஜயலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் சீமானை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சில காரணங்களால் அவரால் ஆஜராக முடியவில்லை. இதுதொடர்பான விளக்க கடிதங்களை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளோம். நடிகை விஜயலட்சுமி 2011-ல் கொடுத்த புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறி புகாரை வாபஸ் வாங்கி விட்டார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்துள்ளார்.

2011-ல் முடிக்கப்பட்ட அந்த வழக்கின் தொடர்ச்சியாகதான் இந்த விசாரணை நடக்கிறதா, அல்லது தற்போது கொடுத்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அதன் அடிப்படையில் மீண்டும் விசாரணை தொடங்க கோர்ட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? போன்ற விவரங்களை கேட்டு இன்ஸ்பெக்டரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.

கடிதங்களை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் இதுகுறித்து ஆலோசனை செய்து விட்டு விளக்கம் அளிப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்த பின்னர் சீமான் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story