தாம்பரம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலரின் மகன் தற்கொலை


தாம்பரம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலரின் மகன் தற்கொலை
x

தாம்பரம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

செங்கல்பட்டு

தி.மு.க. கவுன்சிலர் மகன்

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை திருவள்ளுவர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பண்டரிநாதன். இவருடைய மனைவி பிரேமலதா. இவர், தாம்பரம் மாநகராட்சி 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களுடைய மகன் கோபிநாத் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு செல்போனில் நண்பர்களிடம் பேசி விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டின் மாடிக்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாயார் பிரேமலதா, மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு தனது மகன் கோபிநாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர், உறவினர்களின் உதவியோடு கோபிநாத்தை மீட்டு குரோம்பேடடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கோபிநாத் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தபோது, அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழப்பிடிக்கவில்லை" என எழுதி வைத்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கோபிநாத்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், இதற்காக தீவிரமாக பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் கோபிநாத் தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக கோபிநாத், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story