தொழில்துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


தொழில்துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x

தொழில்துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் மாநாட்டை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில், 3-ம் இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்துள்ளது. தொழில்துறை சிறப்பாக நிர்வகிப்பவர்களால் நிர்வகிக்கப்படுவதே இதற்கு காரணம். ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும், புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு ஒரு அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசை பொருத்தவரைக்கும் எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அவ்வாறு அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.இதை மனதில் வைத்துதான் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகிறது.

காலணி மற்றும் தோல் பொருட்கள் துறையின் மேம்பாட்டிற்காக இன்று "தமிழ்நாடு தோல் பொருட்கள் கொள்கை 2022" வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல் மேலும் பல கொள்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன" என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (23.8.2022) சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், 5 திட்டங்களின் மூலம் 2,250 கோடி ரூபாய் முதலீட்டில், 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31 ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பின்பு, இதுவரை 192 ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, சுமார் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு துறை வாரியான முதலீட்டு மாநாடுகளை மேற்கொண்டு, அத்துறைகளின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story