தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் தள்ளிவைப்பு


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள்  நடைபயணம் தள்ளிவைப்பு
x

கோப்புப்படம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைபயணம் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 25ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும், நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக அறிவித்தது.

இந்தசூழலில் டெல்லி சென்றுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. அப்போது அதிமுக பாஜக கூட்டணி பிளவு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நாளை நடைபெறுவதாக இருந்தது. அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் அந்தக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 4-ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் அக். 6-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story