முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
x

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர் கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2023-ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ''ஆண்டொன்று போனால், வயதொன்று கூடும்'' என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை. அந்தவகையில், கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது.

அதற்கு, முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்தநிலையை நாம் மாற்றிக்காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம்பெற தொடங்கியது. இப்போது 2023-ம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக-பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம். உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்ப்பதுதான் எனக்கு முக்கியம்.

அதற்காகத்தான் நான் முதல்-அமைச்சர் பதவியை ஒரு பெரும் பொறுப்பாக பார்த்து பணியாற்றி வருகிறேன். கடந்த ஓராண்டு காலத்தில் நமது அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான, மகத்தான சாதனைகளை செய்திருக்கிறது. அதை எல்லாம் நான் பட்டியல் போட்டு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் பயன்பெறக்கூடிய உங்களுக்கே அது நன்றாக தெரியும்.

புதிய திட்டங்கள்

ஆட்சிப்பொறுப்புக்கு வந்த அன்றைக்கே நான் சொன்னேன். ''எனக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்களும் பாராட்டும் முதல்-அமைச்சராக நான் செயல்படுவேன்'' என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன். அரசு விழாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் மக்களாகிய உங்கள் அன்பை நான் உணருகிறேன்.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 640-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்திருக்கிறேன். இதில் 550-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள். கட்சி நிகழ்ச்சிகள் 90-க்கும் மேல். மொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டில் 8,500 கி.மீட்டருக்கும் அதிகமாக சுற்றி வந்திருக்கிறேன். மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன் அடைந்து இருக்கிறார்கள்.

இப்படி கோடிக்கணக்கானவர்கள் நாள்தோறும் பயன்பெற்று, நெஞ்சார வாழ்த்தும் அரசாக நமது தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. வருகிற 2023-ம் ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழவர்கள், மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலையினர் என அனைவருக்கும் இன்னும் பல புதிய திட்டங்கள் வர இருக்கிறது.

ஒன்றிணைந்து வாழவேண்டும்

திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என்பது கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவுத்திறனில், தொழில் வளர்ச்சியில், அனைவருக்குமான சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக ஆவதுதான். அந்த லட்சியத்துக்காக என்னையே நான் ஒப்படைத்துக்கொண்டு செயல்படுவேன். இதற்கு தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் மனமார்ந்த ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி, நம்மைப் பிளவுபடுத்தும் சாதிய, மதவாத சக்திகளுக்கு எப்போதும் நாம் இடம் அளிக்கக்கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

வசந்த காலமாக அமையட்டும்

நல்லிணக்க மாநிலமாக இருந்தால்தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு, படிப்பு, படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். உயரிய லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க உழைக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று, நீங்கள் பெருமை அடைவதோடு, உங்கள் பெற்றோரையும் பெருமைப்படுத்த வேண்டும்.

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்று வாழக்கூடாது என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படி இல்லாமல், அனைவரும் தங்களது குடும்பத்தையும் வளப்படுத்தி, சமூக வளத்துக்கும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுத்தொண்டாற்றுவதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில் கடந்த ஆண்டை போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும்.

புத்தாண்டே வருக! புது வாழ்வை தருக! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மலரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்ந்த வாழ்வையும், நீங்காத வளங்களையும், அதிக நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

கே.எஸ்.அழகிரி, அண்ணாமலை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:- தமிழகத்தை காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில், ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத்தேர்தலில் மத்திய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும்.

பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை:- ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும், கொடுக்க தவறுவதில்லை. புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை, புதிய சாதனைகளை படைக்க அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் தெரிவித்துகொள்கிறேன்.

ராமதாஸ், வைகோ

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுகள் வந்துவிட்டன. இனி மலர்ப்பாதையில்தான் நாம் பயணிக்க போகிறோம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- சமூகநீதியும், சகோதரத்துவமும் ஓங்கி ஒளிரவேண்டிய காலகட்டத்தில் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட மத்திய அரசும், இந்துத்துவா சக்திகளும், சனாதன கூட்டமும் மத்திய அதிகாரத்தை பயன்படுத்துகின்றன. இவற்றை எதிர்த்து போராடும் அரசியல் கட்சிகளும், பொதுநலனில் அக்கறை உடையோரும், மாநில சுயாட்சியை காக்கவும், மத்திய அரசின் அநீதியான போக்கை தடுக்கவும், ஆங்கில புத்தாண்டு மலர்கிற இந்த நாளில் சபதம் ஏற்றுக்கொள்வோம்.

கி.வீரமணி, திருமாவளவன்

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி:- தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற அடிப்படையில் உதிக்கும் புத்தாண்டு புத்தாக்கத்தை புது வெள்ளமென பாய்ச்சும் பொது நல பாதுகாப்பு ஆண்டாக பொலிவு தரும் என நம்புவோம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன்:- 2023-ம் ஆண்டு ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைவதற்கான ஒரு புதிய ஆண்டாக மலரட்டும். சாதி, மத வெறுப்பு இல்லாமல் மக்களிடையே சகோதரத்துவம் பெருகட்டும் என்கிற வேட்கையோடு யாவருக்கும் வி.சி.க. சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சித் தலைவர்கள்...

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், எம்.பி.க்கள், டி.ஆர்.பாரிவேந்தர், திருநாவுக்கரசர், விஜய் வசந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர், தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி.சிவா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஏ.கே.தாஜூதீன், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தேசிய தலைவர் எம்.எஸ்.மார்டின் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர்.


Next Story