தமிழக கவர்னர் சட்டசபை மரபை மீறவில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி


தமிழக கவர்னர் சட்டசபை மரபை மீறவில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி
x

தமிழக கவர்னர் சட்டசபை மரபை மீறவில்லை என்று ‘துக்ளக்' விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

பெண்கள் அரசியல்

'துக்ளக்' இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழாவில் அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:-

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது நல்ல விஷயம். ஆனால் வந்தே ஆக வேண்டும் என்பதில் தகுதியற்றவர்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பப் பொறுப்பு மற்றும் பொதுவாழ்வு இரண்டிலும் சாதிக்கக் கூடியவர்கள் மட்டுமே அரசியலிலும் ஜொலிக்க முடியும்.

அரசியல் என்பது போதை. அந்த போதையில் மிதப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியே வர முடியாது. எனவே அரசியலுக்கு வருவதற்கு முன்பு பல கட்ட பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும் அதன் மூலம் தங்களை தகுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அரசியலுக்கு அவர்கள் வரவேண்டும். நமது நாட்டில் 65 சதவீதம் அளவுக்கு வங்கி சேமிப்பு பின்பற்றப்படுகிறது. ஆனால் ஜப்பான் போன்ற பெருநாடுகளில் வட்டி இல்லாத வங்கி சேமிப்பு தான் நடைமுறையில் உள்ளது. இதுதான் அந்த நாடுகள் முன்னேற காரணமாகும்.

அண்ணாமலை வளர்கிறார்

தேசிய திட்டங்களுக்கு தமிழ் பெயர் சூட்டாதது ஏன்? நாட்டை நடத்த தமிழ் மொழியை பிரதமர் மோடி பயன்படுத்துகிறாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். நாடு முழுவதும் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு திட்டத்திற்கு பொதுவான மொழியில் தான் பெயர் சூட்ட முடியும்.

காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பல மாநிலத்தவர்களுக்கு லேசான ஆத்திரத்தை உருவாக்கியது என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி மீது இது கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். அந்த அளவு தமிழின் பெருமையை பறைசாற்றியது, மத்திய அரசு. ஆன்மிகம் மட்டுமே மொழிகளை இணைக்க முடியும், அரசியல் அல்ல. பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீதான உணர்வு இயற்கையாகவே இருக்கிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்கள் வருகிறது. இது அவர் வளர்ந்து வருகிறார் என்பதையே காட்டுகிறது. இளைஞர்கள் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக அரசியலுக்கு வருவது நல்லது. தமிழகத்தில் சாதி-மதத்தை வளர்த்தது அரசியல் கட்சிகள் தான்.

திராவிட மாடலால்...

தமிழகத்தில் திராவிட மாடல் என்று தொடர்ந்து பஜனை செய்து வருகிறார்கள். கருணாநிதி திராவிடத்தை தொட்டுக்கொண்டு தமிழை முன்னிறுத்தினார். ஆனால் இன்று அது நடப்பதில்லை. திராவிட மாடல் என்று தி.மு.க. தொடர்ந்து பேசி வருவது பா.ஜ.க.வுக்கு தான் சாதகம். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

சட்டமன்றத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரபை மீறிவிட்டார் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் தற்புகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய கருத்துகளை எல்லாம் சட்டமன்றத்தில் பேசுவதை அவர் தவிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?.

இன்னும் சொல்லப்போனால் தனக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியே அகற்றும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அத்தகைய சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. ஆனால் பிரச்சினை வளர கூடாது என்ற நோக்கில்தான் கவர்னர் அமைதியாக இருந்தார். எனவே கவர்னர் எந்த இடத்திலும் மரபை மீறவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story