கோவில் சிலைகள் திருடப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது: அண்ணாமலை கடும் தாக்கு


கோவில் சிலைகள் திருடப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது: அண்ணாமலை கடும் தாக்கு
x
தினத்தந்தி 16 Oct 2023 5:06 PM IST (Updated: 16 Oct 2023 5:59 PM IST)
t-max-icont-min-icon

கோவில் சிலைகள் திருடப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவிநாசி,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள் யாத்திரை அவிநாசியில் இன்று தொடங்கியது. இந்த யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சமீபத்தில் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்துகளுக்கு பாதுகாப்பில்லாத மற்றும் சிலை திருட்டை வேடிக்கை பார்க்கும் அரசாக திமுக உள்ளது. அரசின் அறிக்கையின் படி 1992-2017 வரை காணாமல் போன சிலைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல். மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து அங்கம் வகித்த திமுக எத்தனை சிலைகளை மீட்டு வந்துள்ளது?

மோடி பதவியேற்ற பின் 361 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டுடனும் போராடி பிரதமர் மோடி சிலையை மீட்டு வருகிறார். அறநிலையத்துறைதான் தமிழகத்தின் நம்பர் 1 திருடன். அதைத்தான் தெலுங்கானாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார். அவரின் வாக்கு திண்டுக்கல் பூட்டு போல உறுதி மிக்கது. 2024 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவீர்கள் என நம்புகிறோம். அதிமுக ஆட்சி முடியும் போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் 83% நிறைவடைந்தது. ஆனால் திமுக பொறுப்பேற்று 30 மாதம் ஆகியும் இன்னும் 17% கூட நிறைவடையவில்லை. திருப்பூரில் வரும் டிசம்பர் மாதம் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எம்.பிக்கள் இல்லை. ஆனாலும் மக்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்" என்றார்.


Next Story